Monday 24 November 2014

வெண்புறாவின் கனல் கவிதைகள்


வெண்புறாவின் 
 கனல் கவிதைகள்
கூத்து

சுத்துப்பட்டி அத்தனையும்
கண்காணா பட்டணமும்
காலடியில் கதைகேட்கும்
தலை சூடிய மகுடங்களும்
உடை மேவிய வண்ணங்களும்
பொன்பரப்பி கண்பறிக்கும்
உருள்விழியில் சிவப்பேற
சுருள்மீசை துடிப்பேற
குகைவாயது குரல் எறியும்
இதிகாச புராணங்களும்
நடுகல் குலசாமிகளும்
உடல்மொழியால் வெளியேறும்
கூத்துக்கட்டி
ஊர் எல்லையில் கால்படிய
நண்டும் சிண்டும் நகையாடும்
மந்தை தாண்டி சேரி வரை
கால் செருப்பு கையேற
மகுடங்கள் தலைமாறும்
சுருள்மீசை கடுங்குரலும்
பெட்டிகளில் படுத்திருக்க
விழியோர சிவப்பு மட்டும்
வழியாமல் தளும்பி நிற்கும்.


இறைக்க ஊறும் நெருப்பு
கண்ணுக்குத்தெரியாத
நிறை கிணற்றை
தேக்கி வைத்திருக்கிறாய்
அடியாழத்தில்
கள்ளச்சீண்டல்
இழிபார்வை
தடித்த வார்த்தைகள்
இறைத்து வருகின்றன
விழியின் விளிம்பிற்கு
அலம்பித்தளும்புவதும்
தட்டிச் சிதறுவதும்
கொட்டிக் கவிழ்ப்பதுமாய்
விரையம் செய்கிறாய்
நீரை
முன்னும் பின்னுமாய்
சுழலும் உருளை போலன்றி
மேலும் கீழுமாய்
இழுபடும் கயிற்றைப் போலன்றி
கரங்களின் சிவப்பை
விழிகளில் ஏற்று
இறைக்க இறைக்க
ஊற்றெடுக்கும் நெருப்பு.


எரிமூலம்
எரியும் நெருப்புக்கு
வண்ண வேற்றுமை
இல்லையெனினும்
நிச்சயம் உண்டு
வர்ணவேற்றுமை
ஹோமகுண்டத்தில்
எரியும் நெருப்பும்
குடிசைகளை எரிக்கும் நெருப்பும்
வேறுவேறு எனினும்
இரண்டுக்குமான நெய்யின் மூலம்
ஒன்றுதான்
எண்ணெயைப் புசித்து
உயரும் நெருப்புக்கு
தீபம் என்றும்
குப்பைகளைப் பொசுக்கி
பரவும் நெருப்புக்கு
தீ என்றும் பெயர்
நான் தீபமல்ல
தீ.

சாமி
உடலும் மனமும் கூச
மெட்டல் டிடக்டர் சோதனை
சீனப்பெருஞ்சுவர் போல்
தர்மதரிசன வரிசை
விரல்படாமல் எறியப்படும்
விபூதிக்காக
கூனிக்குறுகும் பயபக்தி
சிறைச்சாலையை நினைவூட்டுகின்றன
பெருந்தனக்கோயில்கள்
வீச்சரிவாளும் கையுமாய்
அத்துவானக்காட்டில்
அநாதையாய் நிற்கிறது
கட்டித்தழுவவும்
திட்டிப்பேசவும்
உரிமையுள்ள
காவல் தெய்வங்கள்.

நுட்பம்
சைக்கிள் ஹேண்ட்பாரில்
மாட்டப்பட்ட பஸ்ஹாரன்
சத்தம் அறிவிக்கும்
ஐஸ் வண்டியின் வருகையை
கோடைவெயிலில் குதியாட்டம்
போடும் பிள்ளைகள் காதில்
ஹாரன் சத்தம் விழாமல்
தெருவைக்கடந்து விட வேண்டும்
என அம்மாவுக்கும்
பிள்ளைகள் காதில்
விழவேண்டி விடாமல் அடிக்கும்
ஐஸ் வண்டிக்காரருக்குமான
போட்டியில் எப்போதும்
வெற்றி ஐஸ்வண்டிக்காரருக்கே
அஞ்சறைப்பெட்டியிலோ
கடுகுப்பெட்டியிலோ
துளாவி எடுத்து
அம்மா கொடுத்த பத்துப்பைசா
ஜில்லெனத் தொண்டையை
நனைக்கும் துளித்துளியாய்
சேமியா ஜவ்வரிசி ஆரஞ்சுக்கலர்
குச்சி ஐசோய் என்றும்
பால் ஐஸ், திராட்சை ஐஸ்
கப் ஐசோய் என்றும்
இரண்டு குரல் வைத்திருப்பார்
ஏரியாவுக்குத் தக்கவாறு
இப்போது நினைத்தாலும்
வியப்பாய் இருக்கிறது
அம்மாக்களுக்கும் சுமையேற்றாத
சரக்கையும் மிச்சம் வைக்காத
மண்சார்ந்த உழைப்பாளியின்
வியாபார நுட்பம்.




குறும்புயலின் சீற்றம்
உதயசங்கர்
வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நம்முடைய முகத்திலறைந்து திகைக்க வைக்கிறது. வாழ்க்கை ஒவ்வொரு கணமும் தன் இனிய சிறகுகளில் நம்மை ஏந்தி பறக்க வைக்கிறது. சில தருணங்களில் சிரிக்கவும் அழவும் கூட வைக்கிறது. பல தருணங்களில் ரௌத்ரம் கொள்ளவும் வைக்கிறது. துடிதுடிக்கும் உயிர்ப்போடு பெருநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. சிலர் குளித்துக் கரையேறுகிறார்கள். சிலர் தாகம்தீர உள்ளங்கை குவித்து நீரள்ளிப் பருகிச் செல்கிறார்கள். சிலர் தங்கள் அசுத்தக்கால்களைக் கழுவிச் செல்கிறார்கள். ஆனால் கலைஞன் மட்டுமே ஆற்றின் ஊற்றுக்கண் துவங்கி முடிவடையும் ஆழிப்பெருங்கடல்வரை தானள்ளிய ஒரு கை நீரதில் கண்டுணர்கிறான். வாழ்வின் புறவயமான காட்சிகளினூடாக அகவயமான அநுபவக்கிளர்ச்சி கொள்கிறான்.
இந்த அநுபவக்கிளர்ச்சி தான் மொழியின் வழியே ஆழமும் வேகமும் கூர்மையும் கொண்டு கவிதைகளாக வெளிப்படைகிறது. சமூகத்தின் மீதும் சகமனிதன் மீதும் நேசங்கொண்ட கவிதைகள் கோபம் கொள்கின்றன. ஏங்குகின்றன. உரக்கப் பேசுகின்றன. பகடி செய்கின்றன. அதன் மூலமே வாழ்வின் இருப்பை இடையறாத அதன் மாற்றங்களைப் பதிவு செய்கின்றன. சுயபுலம்பலும் அதீதத்தின் வால்பிடித்துக் கிளை தோறும் தாவி மயக்க மொழிவலையில் கவிதையைச் சிக்க வைத்து அதன் கொதவளையை நெரித்துக் கொண்டிருக்கும் தற்காலிகக் கவிதைச்சூழலில் இதோ ஒரு புதிய குரல்! உரத்துப் பேசும் தகிப்பின் குரல்!
கவிஞர் வெண்புறாவின் ஓவியத்தூரிகை தொடாத ஊர்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். ஓவியங்களை ஒரு புதிய மொழியில் எழுதிய வெண்புறா தகிப்பின் குரல் கவிதைத்தொகுப்பின் மூலம் தன் கவிதைகளை ஒரு புதிய முறையில் வரைந்திருக்கிறார். தெறித்துப்பேசும் கவித்துவக்குரலும், சினந்து பொங்கும் காட்சிப்படிமமும், ஏங்கித்தவிக்கும் பாலிய கால நினைவுகளும் நெகிழ்ந்துருகும் நேசத்தின் உணர்வுகளும் கவிஞர் வெண்புறாவின் கவிதைகளை வாசிக்கும்போது நம்மிடமும் தொற்றிக் கொள்கின்றன.
சமூகத்தின் அவலம் கண்டு அறச்சீற்றம் கொள்ளாத கலைஞன் முதலில் தனக்கும் பின்பு சமூகத்துக்கும் துரோகமிழைக்கிறான். கவிஞர் வெண்புறாவின் கவிதைச் சீற்றம் நமக்குள் கனலை மூட்டுகிறது. கவிஞர் வெண்புறாவின் கவிதையுலகம் இரண்டு தளங்களில் இயங்குகிறது. சுய அநுபவம் சார்ந்த பாலிய கால ஞாபகங்களைச் சார்ந்த மனப்பதிவுகள், விசாரணைகள், என்ற தளத்திலும் சமகால சமூக அரசியல் பண்பாட்டுத் தளத்தின் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் தளத்திலும் இயங்குகிற கவிதைமொழி. முன்னதில் கவித்துவ அமைதியோடும் பின்னதில் கவித்துவச் சீற்றத்தோடும் வெளிப்பட்டு நம்மை ஆச்சரியங்கொள்ள வைக்கிறது. அருவியைப் போன்று மொழியின் லாவகம் கை கூடியிருப்பதனால் இரண்டு தளங்களிலும் தன் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் கவிஞர் வெண்புறா வெற்றி பெற்றிருக்கிறார். தன்னிலிருந்து சமூகத்திற்கும், சமூகத்திலிருந்து தனக்குமாக அநுபவக்கிளர்ச்சிகளில் ஊடாடி நெய்த கவிதைகள் மிக வலிமையாக உருவாகியிருக்கின்றன.

தகிப்பின் குரல் முன்னுரையிலிருந்து

No comments:

Post a Comment