Wednesday 29 October 2014

புதுமைகளின் முதல் குரல்

புதுமைகளின் முதல் குரல் புதுமைப்பித்தன்

உதயசங்கர்

நவீன தமிழிலக்கியத்தினை உலக இலக்கியத்துக்கு இணையாகப் பேச வைத்த படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன். இலக்கியத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலை ஆளுமை. தமிழ்ச்சிறுகதைகளின் போக்கையே மாற்றியமைத்தவர். யாரோடும் ஒப்பிட முடியாத சுயம்புவான படைப்பாளி புதுமைப்பித்தன். அவருடைய எழுத்தின் வேகத்திலும் அறச்சீற்றத்திலும் உண்மை சுடர் விடும். அவர் முழுமையுமாய் ஒரு கலைஞனாக இருந்தார். இலக்கியத்தைத் தன் வாழ்வென நினைத்து வாழ்ந்து மறைந்தவர்.
காலத்தைக் கண்ணாடியெனக் கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலப்பேரருவியில் கலைஞன் அள்ளும் கை நீரே அவனுடைய படைப்புகள். படைப்பை வாசிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித் தோற்றங்கள், மனித மனதில் வாழ்க்கை மதிப்பீடுகளை, சமூக உணர்வை ஏற்படுத்துகிறது.
சோகை பிடித்திருந்த தமிழ்ச்சிறுகதைகளுக்குப் புது ரத்தமும் புது வேகமும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். எல்லோரும் எழுதத் தயங்கிய விஷயங்களைத் துணிச்சலாக எழுதி அந்தக்காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். அவருடைய பொன்னகரம், சங்குத்தேவன் தர்மம், மகாமசானம், கயிற்றரவு, கபாடபுரம், சித்தி, செல்லம்மாள், துன்பக்கேணி, இன்னும் பல கதைகளும் புதுமைப்பித்தனை இன்றளவும் தமிழ்ச்சிறுகதை மேதை என்று கொண்டாட வைப்பவை. தமிழ்ச்சிறுகதைகளில் மட்டுமின்றி கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், என்று எல்லாத்துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் புதுமைப்பித்தன். 
புதுமைப்பித்தனின் காலம் சுதந்திரப்போராட்ட காலம். உணர்ச்சிக் கொந்தளிப்பான காலம். ஆனால் உண்மையும் பொய்மையும் கலந்து மாயமான் தோற்றம் கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தையே புதுமைப்பித்தன் தன் கூரான எழுத்துகளால் பகிடி செய்தார். பொய்மையின் முகத்திரையைக் கிழித்தெறிய தன்னுடைய எழுத்தைப் பயன்படுத்தினார். முக தாட்சண்யம் சற்றுமில்லாமல் அவர் காட்டிய வேகத்தைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். கதை, கவிதை, கட்டுரை, என்று எல்லாவற்றிலும் அவருடைய மேதமை ஒளி வீசியது.
உணர்ச்சியும் , வேகமும், கருத்தும் கொண்ட அவருடைய ” ஓடாதீர் “ கவிதையைக் கேளுங்கள்.
ஓகோ உலகத்தீர் ஓடாதீர்
சாகா வரம் பெற்ற
சரஸ்வதியார் அருள் பெற்ற
வன்னக்கவிராயன் நானல்ல
உன்னிப்பாய் கேளுங்கள்
ஓடாதீர்
வானக்கனவுகளை
வக்கணையாகச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல
சத்தியமாய் சொல்லுகிறேன்
சரஸ்வதியார் நாவினிலே
வந்து நடம் புரியும்
வளமை கிடையாது
உம்மைப்போல் நானும்
ஒருவன் காண்
உம்மைப்போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்
புளுகுகளைக் கொண்டும்மை
கட்டி வைத்துக் காசை
ஏமாந்தால்
கறந்திடுவேன்
என்று கவிஞனையும், கவிதையையும், வாசகனையும் பகிடி செய்யும் கவிதை கடைசியில் சமூகத்தின் பொய்மை முகமூடியை கிழிக்கிறது.
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்பு கட்டி
கல்லில் வடித்து
வையாதீர்
வானத்து அமரன்
வந்தான் காண்
வந்தது போல்
போனான் காண்
என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்
………………………………………………………………………..
……………………………………………………………………………..
சொல்லுக்குச் சோர்வேது
சோகக்கதை என்றால்
சோடி இரண்டு ரூபா
காதல் கதை என்றால்
கை நிறையத் தரவேணும்
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றாற் போல்
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டி வைக்க முடியாது
காசை வையும் கீழே
பின் கனவு தமை வாங்கும்
இந்தா
காலத்தால் சாகாது
காலத்தின்
ஏலத்தால் மலியாது
ஏங்காணும்
ஓடுகிறீர்
ஓடாதீர்
உமைப்போல நானும்
ஒருவன் காண்
ஓடாதீர்!

சமூகத்தின் பொய்மைகளை புதுமைப்பித்தன் அளவுக்கு சாடியவர்கள் உண்டா என்பது சந்தேகம். அவருடைய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் பளீரென மின்னலைப் போல ஒளிர்கிறது. வாசிக்க வாசிக்க வேகம் எடுக்கிறது. போலித்தனத்தைச் சாடி கேலி பேசுகிறார் .தமிழிலக்கியத்தில் சாகாவரம் பெற்ற கலைஞர்களின் வரிசையில் புதுமைப்பித்தனுக்கு தனி இடம் உண்டு.











Tuesday 28 October 2014

புரட்சியின் மௌனப்பிரச்சாரகனாய் தன்னைக் காட்டிய அபி




புரட்சியின் மௌனப்பிரச்சாரகனாய் தன்னைக் காட்டிய அபி

1.யார் வருவீர்

கனவுகளின் ஆழத்தில்

கற்பனையின் வேர்பாய்ச்சிக்

கவிப்பூக்கள் பூக்கின்றேன்

கண்டுகொள்ள யார் வருவீர்

சுவாசக் கொடிக்கருகிச்

சுனை வற்றிப் போகுமுன்னர்

சுருதிச் சிறகசைத்துச்

சுரும்புகளே யார் வருவீர்

என்வெளிச்ச ஏரியினை

இதயத்தின் பாலைகளில்

இறைத்து நிழல்பயிர்கள்

எவ்வளவோ வளர்க்கின்றேன்

இறுதி இருள்புயலில்

என் நிழல்கள் கரைந்திடுமுன்

ஏகாந்தப் பயணத்தின்

இளைப்பாற யார் வருவீர்

காய்ந்த மரக்கொம்பில்

கண்ணீர்ச்சரிகையுடன்

கறுப்புக்குயில் ஒன்று

கானங்கள் நெய்கிறது

கறுப்புக்குயிலுக்குக்

காட்டழைப்பு வருமுன்னர்

கானத்துயிலணியக்

கவிதைகளே யார் வருவீர்

வறண்ட கவிக்கன்னி

வாயிதழில் ஒளிச்சுழிப்பாய்

மௌனச்சிரிப்பொன்று

மயங்கிக் கிடக்கிறது

மௌனக்குறுஞ்சிரிப்பை

மரணம் உறிஞ்சிடுமுன்

மதுச்சிரிப்புப் பொய்கையிலே

மகிழ்ந்தாட யார் வருவீர்

பிஞ்சில் பழுக்காமல்

பிறப்பில் பழுத்தவற்றை

நெஞ்சில் சுமந்திந்த

நெடும்பூமி அழைக்கிறது

நெடும்பூமியின் நெருப்புக்

கொப்புளங்கள் உடைந்திடுமுன்

கடும்பசியை உண்டாக்கும்

கனிதேடி யார் வருவீர்

தன்னைத்தான் தேடிப்

புறப்படுமோர் யாத்திரைக்குச்

சின்னக்குரலாய் ஓர்

அழைப்போசை வருகிறது

சின்னக்குரல் விதியின்

சேற்றில் புதைந்திடுமுன்

சிந்தனையின் யாத்திரைக்குச்

சிறகோடு யார் வருவீர்


.
2. தேடித்தேடி


ஒரு

சுடரையே அகலாக வளைத்துக் கையில்

எடுத்துக்கொண்டு எதைத்தேடுகின்றது?

மௌனத்தைப் பாராயாணம் செய்துகொண்டே

வரும் இரவு இங்கே எதைத் தேடுகின்றது?

மலைகளில் இடறி

கடல்களில் விழுந்து

இமைப்போர்வைகளின் மேல்

உறக்க முத்திரை

ஒற்றிக்கொண்டே

இந்த இரவு எதைத் தேடுகின்றது?

ஓடும்

காற்றை நிறுத்திச்

சோதனை போட்டு

காவின் மலர்களிலிருந்து கசியும்

ரகசியங்களிடை

அலைந்து திரிந்து

மரங்களின் இலைநாக்குகளில்

செவிகொடுத்து நின்று

திசையெங்கும் சென்று

இந்த இரவு எதைத் தேடுகின்றது?

சமாதிகள் என்னும்

தழும்புகளிடையே

புண்களின் வரலாற்றைப்

போய்த் தேடுகின்றதோ?

முதலாளிகளின்

செவிச்சேற்றில் புதைந்து

செத்துப்போன

அழுகுரல்களை இது

தேடுகின்றதோ?

உறக்கங்களுக்குள் ஒளிக்கனவுகளாய்ப்

பதுங்கிய பகலைத்

தேடுகின்றதோ?

நீல விரிப்பில்

நினைவுகள் பரப்பி

கண்ணீர் முத்துக்கள் துடி துடிக்க

பூமியின்

பச்சைப் பரவசத்தின்மேல்

பனிவியர்வைகளைச் சிந்தி

இருளின் சிறகெனப் படரும்

மேகப்படைகளை விலக்கி

ஓ………………….

இந்த இரவு எதைத் தேடுகின்றது?









பாதையை உண்டாக்கும் பாதங்கள்

அப்துல் ரகுமான்

சத்திய தரிசனம் ஆன்மாவில் மௌனவரிகளாகவே பதிவாகிறது. இந்த மௌனம் சப்தங்களாக மொழிபெயர்க்கப்பட்டு மறுபடியும் அர்த்தங்களாகும் படிமுறையில் பிள்ளையார்கள் குரங்காகி விடுகின்ற ஆபத்துண்டு. எப்படியாவது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் கலைஞன் ஏதேனும் ஓர் ஊடகத்தை அது ஆற்றலற்றதாயினும் நாட வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயத்திலிருக்கிறான்.
கலைப்படைப்புகள் சுயத்தின் அறிமுகங்களாக இருப்பதனால் தான் அவற்றின் நவநவமான முகங்கள் தாம் தோன்றுகிற போதெல்லாம் கால விழிகளின் கவனத்தைத் தவறாமல் தம்பக்கம் ஈர்த்துக் கொள்கின்றன. அபியின் படிமங்கள் அணிகளாகவோ, ஆடைகளாகவோ, இன்றி அங்கங்களாகவே படைக்கப்படுகின்றன என்பதை,
” உன் கடைவிழிக்கரையில்
 உன் ஆழங்களின் ரகசியம்
கடற்கன்னி போல்
வரும்..கண்ணயரும் “

“ பகல் வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ – படபடத்து
விழிக்கூட்டுக்குத் திரும்புகிறது “
போன்ற இடங்களில் உணர முடிகிறது.
ஒரு பாதத்தில் சூரியச்சிலம்பு
ஒரு பாதத்தில் சந்திரச்சிலம்பு
……………………………………………………………………………………….
வெள்ளையும் கறுப்புமாய்
இரு பாதங்கள்
காலம் நடக்கிறது
என்கிற பொழுது காலத்தின் பிரமிப்பூட்டும் விசுவரூபம் எவ்வளவு கம்பீரமாகச் சொல்லப்பட்டு விடுகிறது!
“ ஒற்றையடிப்பாதை
எந்த ஊரிலும்
இரை எடுக்காமல்
இளைத்து இளைத்து
எங்கோ போகிற
ஒற்றையடிப்பாதை
என்ற உள்ளமுங்கிய படிமத்தில் ( sunken image ) ஒரு விரக்தியோடு ஊரும் பாம்பாக ஒற்றையடிப்பாதை உருவம் கொள்கிறது. ஜடப்பொருள்களையும் உயிர்ப்பிக்கும் கவிப்பரிவு ( poetic sympathy ) படிமங்களைப் பிரசவிக்கிறது என்பதையும் உணர முடிகிறது.
“ அழகின் முதிர்ச்சி கண்ணீரை எழுப்பும், அந்த சோகந்தான் கவிதையின் ஆதாரசுருதி “ ( எட்கர் ஆலன்போ ) அபியின் கவிதைகள் கண்ணீரஜங்களாகவே பூக்கின்றன. இந்தக் கண்ணீர் சோர்வுவாத  ( pessimism  ) ரசமல்ல. காயம்பட்ட நம்பிக்கைவாதத்தின் ( optimism ) ரத்தம்.
மகோன்னத லட்சியங்களை நோக்கி நடக்கும் தன் பார்வைகளில் யதார்த்தங்கள் நாற்றச்சேறாக அப்பும் போது அவைகளை அருவருப்பது கவிஞனுக்குத் தர்மமாகி விடுகிறது. ‘ ஒரு நம்பிக்கை செத்துக் கிடக்கிறது ‘ என்ற கவிதை எதிர்முகப்பயன் விளைச்சலாக இத்தைகைய யதார்த்தங்களின் மீது நம்மையும் கோபம் கொள்ளச் செய்து விடுகிறது. இந்த உணர்வுப்பின்னணியில் தான்,
“ வாழ்வின் மடியிலிருந்து
சருகுகளாய் உதிர்வதினும்
மரணத்தின் மடியிலிருந்து
விதைகளாய்ச் சிந்தலாமே..”
என்ற குரல் நியாயத்தோடு உரத்து ஒலிக்கிறது.
எந்த வேஷங்களுடையவும் தேவையில்லாமல் இவைகள் தங்கள் சுய அழகின் ஆதிக்க உரிமையால் சிம்மாசனத்தில் அமர்கின்றன. எவற்றுக்கும் எடுபிடிகளாகக் கையைக் கட்டிக் கொண்டு நிற்கவில்லை.
இவைகள் அசலாக இருப்பதன் காரணம் இவைகள் கருவறையிலிருந்து வந்திருக்கின்றன. ஒப்பனை அறையிலிருந்தல்ல. இவைகள் பாதையை உண்டாக்கும் பாதங்கள். எனவே எந்தப் பழைய பாதையின் புழுதியும் இவற்றை அழுக்காக்கவில்லை.
( மௌனத்தின் நாவுகள் முன்னுரையிலிருந்து சில பகுதிகள் )










இது இதுவாகவே இருக்கிறது

மீரா


அபி அபியாகவே இருக்கிறார். இதில் தான் இவருடைய பெருமை அடங்கியிருக்கிறது.
“ கனவுகளின் ஆழத்தில்
கற்பனையின் வேர்பாய்ச்சி
கவிப்பூக்கள் பூக்கின்றேன் “
என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் இவரிடம் கவிதையின் மொத்த வனப்பையும் தரிசிக்க முடிகிறது. இங்கே யுகமுகடுகளுக்கே சென்று நிமிஷ நுரைகளோடு நேரங்கள் சரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் அதிசயக்கவிஞரைப் பார்க்க முடிகிறது. இங்கே தன்னையே எரித்து வெளிச்சம் உண்டாக்கித் தன் காதலியைத் தேடும் ஓர் அபூர்வக்காதலனைச் சந்திக்க முடிகிறது. இங்கே இமைக்கத்தரியால் துண்டிக்கப்படும் நித்திரையையும் தானே ஊர்ந்து கொண்டிருக்கும் ஒற்றையடிப்பாதையையும் தன் அடர்த்திக்குத் தானே திகைக்கும் இருளையும் காற்றை நிறுத்திச் சோதனை போடும் இரவையும் காலுக்குரிய முகத்தைக் கற்பனை செய்து கொள்ளும் கால்பந்தையும் காணமுடிகிறது.
அனுபவகனம் மிகுந்த இந்தக் கவிதைகளின் அழகை அனுபவிக்க வேண்டுமானால் ஒன்றின் மேல் ஒன்றாகப் படிந்த கற்பனைகளை விரித்து விரித்து உள்ளே உள்ளே புக வேண்டும். ஒன்றின் மேல் ஒன்றாக ( overlapping ) என்றால் ஏதோ வெங்காயம் போல அல்ல—உரித்துப் போட்டால் மிஞ்சுவது எதுவுமில்லை என்று கூறிவிட.
அழகின் உச்சி படிமம் என்றால் அதை முறைப்படி தொட்ட பெருமை இவருக்குரியது. இராமன் கை வில் போலவும் இராவணன் கை யாழ் போலவும் இவரிடம் படிமம் சொன்னபடி கேட்கிறது. இவர் பலவந்தப்படுத்துவதுமில்லை. அதனால் அது முரண்டு பிடிப்பதுமில்லை.
அபியின் நீலாம்பரியைப் பாருங்கள். அது படிமத்தின் சூக்குமத்தை நன்றாகப்புரிந்து கொண்டதன் வெளிப்பாடு. கவிதையின் பிற்பகுதி உறக்கத்தின் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது. முற்பகுதியோ உறக்கத்தை ஒரு பறவையாக உருவகப் படுத்துகிறது. இந்த உருவகம் மூளியாக இல்லாமல் முழுமை பெற்று விளங்குகிறது.
“ பகல்வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து
விழிக்கூட்டுக்குத் திரும்புகிறது. “
பார்மகள் மடியில் பலபாறை அடுக்குகளுக்கு அடியில் உறைந்திருக்கும் பாசில்கள் ( fossils ) போல் அபியின் கவிதையில் படிந்துள்ள அடுக்கடுக்கான கற்பனைகளுக்கு அடியில் உள்ளார்ந்த மனிதாபிமானம் இருக்கக் காணலாம். அதனால் தான் சிறகுகள் முறிந்து மழையாய் கண்ணீர் சிந்த நேர்ந்தபோதும் நசுக்கப்படுவோர் கண்ணீரை இடிகளாய் மாற்றிய கிப்ரானைப் போலவே தான் இனந்தெரியாத சோகச்சுழலுள் சிக்கி இருந்தாலுங்கூட ஏழை எளியோரைக் கரை சேர்க்கும் உன்னதமான எண்ணம் கொண்டவர் அபி.
        தேடித்தேடி என்ற கவிதையில் இரவு எதை எதையோ தேடிப்போவதாகச் சித்தரிக்கிறார். எதைத் தேடுகிறது என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுப்புகிறார்.
        ” முதலாளிகளின்
செவிச்சேற்றில் புதைந்து
செத்துப்போன
அழுகுரல்களை இது
தேடுகின்றதோ?
என்பதும் அக்கேள்விகளுள் ஒன்று. இது முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டவில்லையா?
“ இங்கே ஒரு புயல் பிறந்தால்
இதன் வளங்களைச்
சுட்டெரிக்கும் சுயநலக்காரரின்
சுவடுகள் அழியும்
பிறக்க வேண்டுமே,”
பிறக்க வேண்டுமே என்பதில் உள்ள ஏக்கத்தொனி நம்மை எழ வைக்கிறது. இவரால் தான் ஆரவாரமில்லாமல் புரட்சிக்குப் படை திரட்ட முடியும்.
( மௌனத்தின் நாவுகள் நூலின் பின்னுரையிலிருந்து சில பகுதிகள் )


                                        

Sunday 26 October 2014

மகாகவி பாரதி

மகாகவி பாரதி

(  தோற்றம்  11-12-1882--மறைவு 12-9-1921 )
1.

அக்னிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை  வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

2. காற்று


காற்றே வா, மெதுவாக வா

ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே

காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே

அலமாரிப்புத்தகங்களைக் கீழே தள்ளி விடாதே

பார்த்தாயா இதோ தள்ளி விட்டாய்

புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து விட்டாய்

மறுபடி மழையைக் கொண்டு வந்து சேர்த்தாய்


வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை

பார்ப்பதிலே நீ மகாசமர்த்தன்

நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை

நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்

நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத்தேவன் புடைத்து

நொறுக்கி விடுவான்

சொன்னாலும் கேட்க மாட்டான்


ஆதலால் மானிடரே வாருங்கள்

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்

கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்

உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்

உயிரை வலிமையுற நிறுத்துவோம்

உள்ளத்தை உறுதி செய்வோம்

இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகி விடுவான்

காற்று மெலிய தீயை அவித்து விடுவான்

வலிய தீயை வளர்ப்பான்


அவன் தோழமை நன்று

அவனை நித்தமும் வாழ்த்துவோம்.

Thursday 23 October 2014

புதுக்குரல்,,,,,

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் சங்கமம்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் சரித்திரம் சொல்லும் பெட்டகம்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் புதுவெளி

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் முக்கடல்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் கிழக்குச்சூரியன்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் புதுப்பிரபஞ்சம்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் புதுமூச்சு

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் முழக்க மேடை