புரட்சியின் மௌனப்பிரச்சாரகனாய்
தன்னைக் காட்டிய அபி
1.யார் வருவீர்
கனவுகளின் ஆழத்தில்
கற்பனையின் வேர்பாய்ச்சிக்
கவிப்பூக்கள் பூக்கின்றேன்
கண்டுகொள்ள யார் வருவீர்
சுவாசக் கொடிக்கருகிச்
சுனை வற்றிப் போகுமுன்னர்
சுருதிச் சிறகசைத்துச்
சுரும்புகளே யார் வருவீர்
என்வெளிச்ச ஏரியினை
இதயத்தின் பாலைகளில்
இறைத்து நிழல்பயிர்கள்
எவ்வளவோ வளர்க்கின்றேன்
இறுதி இருள்புயலில்
என் நிழல்கள் கரைந்திடுமுன்
ஏகாந்தப் பயணத்தின்
இளைப்பாற யார் வருவீர்
காய்ந்த மரக்கொம்பில்
கண்ணீர்ச்சரிகையுடன்
கறுப்புக்குயில் ஒன்று
கானங்கள் நெய்கிறது
கறுப்புக்குயிலுக்குக்
காட்டழைப்பு வருமுன்னர்
கானத்துயிலணியக்
கவிதைகளே யார் வருவீர்
வறண்ட கவிக்கன்னி
வாயிதழில் ஒளிச்சுழிப்பாய்
மௌனச்சிரிப்பொன்று
மயங்கிக் கிடக்கிறது
மௌனக்குறுஞ்சிரிப்பை
மரணம் உறிஞ்சிடுமுன்
மதுச்சிரிப்புப் பொய்கையிலே
மகிழ்ந்தாட யார் வருவீர்
பிஞ்சில் பழுக்காமல்
பிறப்பில் பழுத்தவற்றை
நெஞ்சில் சுமந்திந்த
நெடும்பூமி அழைக்கிறது
நெடும்பூமியின் நெருப்புக்
கொப்புளங்கள் உடைந்திடுமுன்
கடும்பசியை உண்டாக்கும்
கனிதேடி யார் வருவீர்
தன்னைத்தான் தேடிப்
புறப்படுமோர் யாத்திரைக்குச்
சின்னக்குரலாய் ஓர்
அழைப்போசை வருகிறது
சின்னக்குரல் விதியின்
சேற்றில் புதைந்திடுமுன்
சிந்தனையின் யாத்திரைக்குச்
சிறகோடு யார் வருவீர்
.
2. தேடித்தேடி
ஒரு
சுடரையே அகலாக வளைத்துக் கையில்
எடுத்துக்கொண்டு எதைத்தேடுகின்றது?
மௌனத்தைப் பாராயாணம் செய்துகொண்டே
வரும் இரவு இங்கே எதைத் தேடுகின்றது?
மலைகளில் இடறி
கடல்களில் விழுந்து
இமைப்போர்வைகளின் மேல்
உறக்க முத்திரை
ஒற்றிக்கொண்டே
இந்த இரவு எதைத் தேடுகின்றது?
ஓடும்
காற்றை நிறுத்திச்
சோதனை போட்டு
காவின் மலர்களிலிருந்து கசியும்
ரகசியங்களிடை
அலைந்து திரிந்து
மரங்களின் இலைநாக்குகளில்
செவிகொடுத்து நின்று
திசையெங்கும் சென்று
இந்த இரவு எதைத் தேடுகின்றது?
சமாதிகள் என்னும்
தழும்புகளிடையே
புண்களின் வரலாற்றைப்
போய்த் தேடுகின்றதோ?
முதலாளிகளின்
செவிச்சேற்றில் புதைந்து
செத்துப்போன
அழுகுரல்களை இது
தேடுகின்றதோ?
உறக்கங்களுக்குள் ஒளிக்கனவுகளாய்ப்
பதுங்கிய பகலைத்
தேடுகின்றதோ?
நீல விரிப்பில்
நினைவுகள் பரப்பி
கண்ணீர் முத்துக்கள் துடி துடிக்க
பூமியின்
பச்சைப் பரவசத்தின்மேல்
பனிவியர்வைகளைச் சிந்தி
இருளின் சிறகெனப் படரும்
மேகப்படைகளை விலக்கி
ஓ………………….
இந்த இரவு எதைத் தேடுகின்றது?
பாதையை உண்டாக்கும் பாதங்கள்
அப்துல் ரகுமான்
சத்திய தரிசனம் ஆன்மாவில் மௌனவரிகளாகவே பதிவாகிறது. இந்த மௌனம்
சப்தங்களாக மொழிபெயர்க்கப்பட்டு மறுபடியும் அர்த்தங்களாகும் படிமுறையில் பிள்ளையார்கள்
குரங்காகி விடுகின்ற ஆபத்துண்டு. எப்படியாவது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் துடிக்கும்
கலைஞன் ஏதேனும் ஓர் ஊடகத்தை அது ஆற்றலற்றதாயினும் நாட வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயத்திலிருக்கிறான்.
கலைப்படைப்புகள் சுயத்தின் அறிமுகங்களாக இருப்பதனால் தான் அவற்றின்
நவநவமான முகங்கள் தாம் தோன்றுகிற போதெல்லாம் கால விழிகளின் கவனத்தைத் தவறாமல் தம்பக்கம்
ஈர்த்துக் கொள்கின்றன. அபியின் படிமங்கள் அணிகளாகவோ, ஆடைகளாகவோ, இன்றி அங்கங்களாகவே
படைக்கப்படுகின்றன என்பதை,
” உன் கடைவிழிக்கரையில்
உன் ஆழங்களின் ரகசியம்
கடற்கன்னி போல்
வரும்..கண்ணயரும் “
“ பகல் வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ – படபடத்து
விழிக்கூட்டுக்குத் திரும்புகிறது
“
போன்ற இடங்களில் உணர முடிகிறது.
ஒரு பாதத்தில் சூரியச்சிலம்பு
ஒரு பாதத்தில் சந்திரச்சிலம்பு
……………………………………………………………………………………….
வெள்ளையும் கறுப்புமாய்
இரு பாதங்கள்
காலம் நடக்கிறது
என்கிற பொழுது காலத்தின் பிரமிப்பூட்டும் விசுவரூபம் எவ்வளவு
கம்பீரமாகச் சொல்லப்பட்டு விடுகிறது!
“ ஒற்றையடிப்பாதை
எந்த ஊரிலும்
இரை எடுக்காமல்
இளைத்து இளைத்து
எங்கோ போகிற
ஒற்றையடிப்பாதை
என்ற உள்ளமுங்கிய படிமத்தில் ( sunken image ) ஒரு விரக்தியோடு
ஊரும் பாம்பாக ஒற்றையடிப்பாதை உருவம் கொள்கிறது. ஜடப்பொருள்களையும் உயிர்ப்பிக்கும்
கவிப்பரிவு ( poetic sympathy ) படிமங்களைப் பிரசவிக்கிறது என்பதையும் உணர முடிகிறது.
“ அழகின் முதிர்ச்சி கண்ணீரை எழுப்பும், அந்த சோகந்தான் கவிதையின்
ஆதாரசுருதி “ ( எட்கர் ஆலன்போ ) அபியின் கவிதைகள் கண்ணீரஜங்களாகவே பூக்கின்றன. இந்தக்
கண்ணீர் சோர்வுவாத ( pessimism ) ரசமல்ல. காயம்பட்ட நம்பிக்கைவாதத்தின் (
optimism ) ரத்தம்.
மகோன்னத லட்சியங்களை நோக்கி நடக்கும்
தன் பார்வைகளில் யதார்த்தங்கள் நாற்றச்சேறாக அப்பும் போது அவைகளை அருவருப்பது கவிஞனுக்குத்
தர்மமாகி விடுகிறது. ‘ ஒரு நம்பிக்கை செத்துக் கிடக்கிறது ‘ என்ற கவிதை எதிர்முகப்பயன்
விளைச்சலாக இத்தைகைய யதார்த்தங்களின் மீது நம்மையும் கோபம் கொள்ளச் செய்து விடுகிறது.
இந்த உணர்வுப்பின்னணியில் தான்,
“ வாழ்வின் மடியிலிருந்து
சருகுகளாய் உதிர்வதினும்
மரணத்தின் மடியிலிருந்து
விதைகளாய்ச் சிந்தலாமே..”
என்ற குரல் நியாயத்தோடு உரத்து
ஒலிக்கிறது.
எந்த வேஷங்களுடையவும் தேவையில்லாமல்
இவைகள் தங்கள் சுய அழகின் ஆதிக்க உரிமையால் சிம்மாசனத்தில் அமர்கின்றன. எவற்றுக்கும்
எடுபிடிகளாகக் கையைக் கட்டிக் கொண்டு நிற்கவில்லை.
இவைகள் அசலாக இருப்பதன் காரணம்
இவைகள் கருவறையிலிருந்து வந்திருக்கின்றன. ஒப்பனை அறையிலிருந்தல்ல. இவைகள் பாதையை உண்டாக்கும்
பாதங்கள். எனவே எந்தப் பழைய பாதையின் புழுதியும் இவற்றை அழுக்காக்கவில்லை.
( மௌனத்தின் நாவுகள் முன்னுரையிலிருந்து
சில பகுதிகள் )
இது இதுவாகவே இருக்கிறது
மீரா
அபி அபியாகவே இருக்கிறார். இதில்
தான் இவருடைய பெருமை அடங்கியிருக்கிறது.
“ கனவுகளின் ஆழத்தில்
கற்பனையின் வேர்பாய்ச்சி
கவிப்பூக்கள் பூக்கின்றேன் “
என்று தன்னைக் காட்டிக் கொள்ளும்
இவரிடம் கவிதையின் மொத்த வனப்பையும் தரிசிக்க முடிகிறது. இங்கே யுகமுகடுகளுக்கே சென்று
நிமிஷ நுரைகளோடு நேரங்கள் சரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் அதிசயக்கவிஞரைப்
பார்க்க முடிகிறது. இங்கே தன்னையே எரித்து வெளிச்சம் உண்டாக்கித் தன் காதலியைத் தேடும்
ஓர் அபூர்வக்காதலனைச் சந்திக்க முடிகிறது. இங்கே இமைக்கத்தரியால் துண்டிக்கப்படும்
நித்திரையையும் தானே ஊர்ந்து கொண்டிருக்கும் ஒற்றையடிப்பாதையையும் தன் அடர்த்திக்குத்
தானே திகைக்கும் இருளையும் காற்றை நிறுத்திச் சோதனை போடும் இரவையும் காலுக்குரிய முகத்தைக்
கற்பனை செய்து கொள்ளும் கால்பந்தையும் காணமுடிகிறது.
அனுபவகனம் மிகுந்த இந்தக் கவிதைகளின்
அழகை அனுபவிக்க வேண்டுமானால் ஒன்றின் மேல் ஒன்றாகப் படிந்த கற்பனைகளை விரித்து விரித்து
உள்ளே உள்ளே புக வேண்டும். ஒன்றின் மேல் ஒன்றாக ( overlapping ) என்றால் ஏதோ வெங்காயம்
போல அல்ல—உரித்துப் போட்டால் மிஞ்சுவது எதுவுமில்லை என்று கூறிவிட.
அழகின் உச்சி படிமம் என்றால் அதை
முறைப்படி தொட்ட பெருமை இவருக்குரியது. இராமன் கை வில் போலவும் இராவணன் கை யாழ் போலவும்
இவரிடம் படிமம் சொன்னபடி கேட்கிறது. இவர் பலவந்தப்படுத்துவதுமில்லை. அதனால் அது முரண்டு
பிடிப்பதுமில்லை.
அபியின் நீலாம்பரியைப் பாருங்கள்.
அது படிமத்தின் சூக்குமத்தை நன்றாகப்புரிந்து கொண்டதன் வெளிப்பாடு. கவிதையின் பிற்பகுதி
உறக்கத்தின் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது. முற்பகுதியோ உறக்கத்தை ஒரு பறவையாக உருவகப்
படுத்துகிறது. இந்த உருவகம் மூளியாக இல்லாமல் முழுமை பெற்று விளங்குகிறது.
“ பகல்வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து
விழிக்கூட்டுக்குத் திரும்புகிறது.
“
பார்மகள் மடியில் பலபாறை அடுக்குகளுக்கு அடியில் உறைந்திருக்கும்
பாசில்கள் ( fossils ) போல் அபியின் கவிதையில் படிந்துள்ள அடுக்கடுக்கான கற்பனைகளுக்கு
அடியில் உள்ளார்ந்த மனிதாபிமானம் இருக்கக் காணலாம். அதனால் தான் சிறகுகள் முறிந்து
மழையாய் கண்ணீர் சிந்த நேர்ந்தபோதும் நசுக்கப்படுவோர் கண்ணீரை இடிகளாய் மாற்றிய கிப்ரானைப்
போலவே தான் இனந்தெரியாத சோகச்சுழலுள் சிக்கி இருந்தாலுங்கூட ஏழை எளியோரைக் கரை சேர்க்கும்
உன்னதமான எண்ணம் கொண்டவர் அபி.
தேடித்தேடி என்ற
கவிதையில் இரவு எதை எதையோ தேடிப்போவதாகச் சித்தரிக்கிறார். எதைத் தேடுகிறது என்று கேள்விக்கு
மேல் கேள்வி எழுப்புகிறார்.
” முதலாளிகளின்
செவிச்சேற்றில் புதைந்து
செத்துப்போன
அழுகுரல்களை இது
தேடுகின்றதோ?
என்பதும் அக்கேள்விகளுள் ஒன்று.
இது முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டவில்லையா?
“ இங்கே ஒரு புயல் பிறந்தால்
இதன் வளங்களைச்
சுட்டெரிக்கும் சுயநலக்காரரின்
சுவடுகள் அழியும்
பிறக்க வேண்டுமே,”
பிறக்க வேண்டுமே என்பதில் உள்ள
ஏக்கத்தொனி நம்மை எழ வைக்கிறது. இவரால் தான் ஆரவாரமில்லாமல் புரட்சிக்குப் படை திரட்ட
முடியும்.
( மௌனத்தின் நாவுகள் நூலின் பின்னுரையிலிருந்து
சில பகுதிகள் )
No comments:
Post a Comment