புதுமைகளின் முதல் குரல் புதுமைப்பித்தன்
உதயசங்கர்
நவீன தமிழிலக்கியத்தினை
உலக இலக்கியத்துக்கு இணையாகப் பேச வைத்த படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன்.
இலக்கியத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலை ஆளுமை. தமிழ்ச்சிறுகதைகளின் போக்கையே
மாற்றியமைத்தவர். யாரோடும் ஒப்பிட முடியாத சுயம்புவான படைப்பாளி புதுமைப்பித்தன். அவருடைய
எழுத்தின் வேகத்திலும் அறச்சீற்றத்திலும் உண்மை சுடர் விடும். அவர் முழுமையுமாய் ஒரு
கலைஞனாக இருந்தார். இலக்கியத்தைத் தன் வாழ்வென நினைத்து வாழ்ந்து மறைந்தவர்.
காலத்தைக்
கண்ணாடியெனக் கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக்
கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலப்பேரருவியில் கலைஞன் அள்ளும்
கை நீரே அவனுடைய படைப்புகள். படைப்பை வாசிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித் தோற்றங்கள்,
மனித மனதில் வாழ்க்கை மதிப்பீடுகளை, சமூக உணர்வை ஏற்படுத்துகிறது.
சோகை பிடித்திருந்த
தமிழ்ச்சிறுகதைகளுக்குப் புது ரத்தமும் புது வேகமும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். எல்லோரும்
எழுதத் தயங்கிய விஷயங்களைத் துணிச்சலாக எழுதி அந்தக்காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.
அவருடைய பொன்னகரம், சங்குத்தேவன் தர்மம், மகாமசானம், கயிற்றரவு, கபாடபுரம், சித்தி,
செல்லம்மாள், துன்பக்கேணி, இன்னும் பல கதைகளும் புதுமைப்பித்தனை இன்றளவும் தமிழ்ச்சிறுகதை
மேதை என்று கொண்டாட வைப்பவை. தமிழ்ச்சிறுகதைகளில் மட்டுமின்றி கவிதை, மொழிபெயர்ப்பு,
கட்டுரைகள், என்று எல்லாத்துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனின்
காலம் சுதந்திரப்போராட்ட காலம். உணர்ச்சிக் கொந்தளிப்பான காலம். ஆனால் உண்மையும் பொய்மையும்
கலந்து மாயமான் தோற்றம் கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தையே புதுமைப்பித்தன் தன் கூரான
எழுத்துகளால் பகிடி செய்தார். பொய்மையின் முகத்திரையைக் கிழித்தெறிய தன்னுடைய எழுத்தைப்
பயன்படுத்தினார். முக தாட்சண்யம் சற்றுமில்லாமல் அவர் காட்டிய வேகத்தைக் கண்டு அஞ்சி
நடுங்கினார்கள். கதை, கவிதை, கட்டுரை, என்று எல்லாவற்றிலும் அவருடைய மேதமை ஒளி வீசியது.
உணர்ச்சியும்
, வேகமும், கருத்தும் கொண்ட அவருடைய ” ஓடாதீர் “ கவிதையைக் கேளுங்கள்.
ஓகோ உலகத்தீர்
ஓடாதீர்
சாகா வரம்
பெற்ற
சரஸ்வதியார்
அருள் பெற்ற
வன்னக்கவிராயன்
நானல்ல
உன்னிப்பாய்
கேளுங்கள்
ஓடாதீர்
வானக்கனவுகளை
வக்கணையாகச்
சொல்லும்
உண்மைக்
கவிராயன்
நானல்ல
சத்தியமாய்
சொல்லுகிறேன்
சரஸ்வதியார்
நாவினிலே
வந்து
நடம் புரியும்
வளமை கிடையாது
உம்மைப்போல்
நானும்
ஒருவன்
காண்
உம்மைப்போல்
நானும்
ஊக்கம்
குறையாமல்
பொய்கள்
புனைந்திடுவேன்
புளுகுகளைக்
கொண்டும்மை
கட்டி
வைத்துக் காசை
ஏமாந்தால்
கறந்திடுவேன்
என்று
கவிஞனையும், கவிதையையும், வாசகனையும் பகிடி செய்யும் கவிதை கடைசியில் சமூகத்தின் பொய்மை
முகமூடியை கிழிக்கிறது.
இத்தனைக்கும்
மேலே
இனி ஒன்று
ஐயா நான்
செத்ததற்குப்
பின்னால்
நிதிகள்
திரட்டாதீர்
நினைவை
விளிம்பு கட்டி
கல்லில்
வடித்து
வையாதீர்
வானத்து
அமரன்
வந்தான்
காண்
வந்தது
போல்
போனான்
காண்
என்று
புலம்பாதீர்
அத்தனையும்
வேண்டாம்
அடியேனை
விட்டு விடும்
………………………………………………………………………..
……………………………………………………………………………..
சொல்லுக்குச்
சோர்வேது
சோகக்கதை
என்றால்
சோடி இரண்டு
ரூபா
காதல்
கதை என்றால்
கை நிறையத்
தரவேணும்
ஆசாரக்
கதை என்றால்
ஆளுக்கு
ஏற்றாற் போல்
பேரம்
குறையாது
பேச்சுக்கு
மாறில்லை
ஆசை வைத்துப்
பேசி எமை
ஆட்டி
வைக்க முடியாது
காசை வையும்
கீழே
பின் கனவு
தமை வாங்கும்
இந்தா
காலத்தால்
சாகாது
காலத்தின்
ஏலத்தால்
மலியாது
ஏங்காணும்
ஓடுகிறீர்
ஓடாதீர்
உமைப்போல
நானும்
ஒருவன்
காண்
ஓடாதீர்!
சமூகத்தின்
பொய்மைகளை புதுமைப்பித்தன் அளவுக்கு சாடியவர்கள் உண்டா என்பது சந்தேகம். அவருடைய கவிதை
வரிகள் ஒவ்வொன்றும் பளீரென மின்னலைப் போல ஒளிர்கிறது. வாசிக்க வாசிக்க வேகம் எடுக்கிறது.
போலித்தனத்தைச் சாடி கேலி பேசுகிறார் .தமிழிலக்கியத்தில் சாகாவரம் பெற்ற கலைஞர்களின்
வரிசையில் புதுமைப்பித்தனுக்கு தனி இடம் உண்டு.