சமகாலத்தின் தகிப்பைப் பிரதிபலிக்கும்
கவிஞன்
இரா. தெ. முத்து
காற்றிலும் தீட்டு
பூமித்தாயின் மார்பகம்
சுரந்த அமுதை
நாங்கள் சுவைக்கக் கூடாதா?
சிரட்டைகளிலும் கைகளிலும்
ஏந்தி நக்கிட
நாங்கள் என்ன நாய்களா?
எங்களின் கரம் பட்டு
தண்ணீர் தீட்டாகும் என்றால்
உனக்கான உணவிற்கு
நீயே சேற்றில் இறங்கு
நீயே நாற்று நடு
நீயே களை எடு
நாங்களே தீட்டு என்றால்
உனது தலையை
உனது முகத்தை
உனது அக்குளை
உனது மறைவிடத்தை
நீயே சிரைத்துக் கொள்
உனது கோவணத் துணியை
நீயே கசக்கிக் கட்டு
உனது அழுக்குத் துணிகளுக்கு
நீயே வெள்ளாவி வை
உனது
கால் செருப்புகளுக்கானத் தோலை
நீயே உரித்துக் கொள்
உனது மலத்தையும்
உனது குடும்ப மலத்தையும்
நீயே அள்ளு
நீயே சுமந்துக் கொட்டு
எங்களின் கரம் பட்டு
தண்ணீர் தீட்டானதென
தண்டித்தவனே,
நீள் ககனப்பெருவெளியில்
எங்கள் சுவாசக் காற்றும்
கலந்தே இருக்கிறது
நீ மானஸ்தன்
எங்கே உனது
மூச்சை நிறுத்திக் கொள்
காற்றிலும் தீட்டு
பட்டுவிட்டதடா.
(1995 சேலம்,மேட்டூர் தாலுகா,
கண்டியப்பநாயக்கன் பேட்டையில் தண்னீர்பானையிலிருந்து தண்னீர் எடுத்துக்
குடித்த்தற்காக,ஐந்து வயது தலித் மாணவி தனத்தின் கண்களை,சாதிவெறி கொண்ட ஆசிரியர்
அடித்து பார்வையைப் பறித்துக் கொண்ட கொடுமையைப் தினமணியில் படித்த பொழுது
வெடித்தக் கவிதை)
கனிந்து சிவக்கும் காலச்சூரியன்
நவம்பர் புரட்சி தொடர்கிறது
புதிய களங்களில் புதிய சிகரங்களில்
சோவியத்தின் பின்னடைவை
சோசலிசத்தின் தோல்வி என்றும்
முதலாளியத்தின் வெற்றி என்றும்
கொள்ளிக்குடம் உடைத்து
கிள்ளிப்போடத் துடிக்கிறார்கள்
வரலாறு எப்பொழுதும் முன்னோக்கியே நகருமென்பதை
ஆத்திரத்தில் மறந்து போகிறார்கள்
கொலம்பஸின் கூட்டாளிகளும்
ஆடம்ஸ்மித்தின் அடிவருடிகளும்
நாடுவிட்டு நாடு தாண்டுதலில்
கண்டம் விட்ட கண்டம் தாவுதலில் இருக்கிறது
மத்தியக்கால சாம்ராஜ்யங்களை
உருவாக்கத்துடிக்கும் யுத்த வியாபாரிகளின்
உயிர்த்தலம்
புதுப்புது வடிவில் வெடிக்கும்
இங்கிலாந்துப் போராட்டங்களும்
ஐரோப்பிய வீதிகளில் கொட்டப்படும் பாலில்
தெறிக்கும் ரௌத்ரமும்
ஆசியான் ஒப்பந்தத்தை எதிர்த்த
கேரள ஆவேச அணிவகுப்பும்
தங்கள் வாழ்வாதாரங்களின் மீது
படரும் ஏகாதிபத்திய ஆக்டோபஸை
எதிர்த்துயர்ந்த எக்காளங்கள்
ஒபாமாவாலும் உருப்படாத அமெரிக்காவின்
மீட்புநிதி, மீட்சியை நோக்கி நகர்தல்
என்பதெல்லாம்
மூச்சுத்திணறும் முதலாளியத்தின்
குழறல் வார்த்தைகளாகவே ஒலிக்கின்றன
மூலதனத்தை வாசியுங்கள் என்று
புனித போப்பாண்டவர் சொல்வதும்
நூற்றாண்டின் மாமனிதர் காரல்மார்க்ஸ்
என தேர்வு செய்யப்படுவதும்
கம்யூனிசத்தின் தேவையை
ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்கள்
நவம்பர் புரட்சியின் பெரும்பாதையில்
சீனா, கியூபாவோடு கரம் கோர்த்த
வடகொரியா, வியட்நாம், வெனிசுலா
பொலிவியா, நிகரகுவா
கார்ப்பரேட் ஊடகங்களின் கணக்குகளை
கலைத்துப் போட்டு எழுதிச் செல்கின்றன
புதுயுக மனிதர்களின் புதிய பண்பாட்டை
தகர்த்தெறியப்பட்ட லெனின் சிலைகளினூடாக
ஆப்கன் நஜிபுல்லா செக் செசன்கோவ் உயிரை
முட்டை ஓட்டை உடைத்து உறிஞ்சுவது போலும்
கொன்றழித்த எதிரிகளின் தற்போதைய தோல்விகளுக்கு
என்ன மாதிரி பரிசளிக்கப் போகிறது உலகம்?
மீண்டெழும் புரட்சியை வெற்றிலைக் காம்பென
கிள்ளி எறிந்துவிட முடியுமா?
பெரும்பான்மையோர் சூடிக்கொள்ளும் விடுதலையை
நிதிமூலதன மூதேவிகளால் மூடியிட இயலுமா?
பேரண்டம் தழுவிய தொழிலாளர் எழுச்சியை
கழுகுகள் எதிர்கொண்டு நிற்குமா?
அடடா அடடாவோ திக்குகள் விடிய
கனிந்து சிவக்கும் காலச் சூரியனை
உள்ளங்கைக்குள்
ஒளித்து வைக்க முடியுமா?
நீயும் நீ சார்ந்ததும்
ஆதி திணைநில
தொல்மாந்தர் நெறி
உறைந்த காலபடிமத்தில் உயிர்த்து
காலத்தின் காலத்தில்
சந்திரசூரியர் போல்
நம் பொலிவுறு பெருங்காதல்
நீயும் நீ சார்ந்ததும்
உன் மீதான ஈர்ப்பு
ஒரு போராட்டக் களத்தில் நிகழ்ந்தது
படர்ந்திருந்த செம்பருத்தி பூ போன்ற
பேரழகால் ஈர்க்கபட்ட மனம் உன்னோடு
தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது
உனதன்பும் தோழமையும் வழி நடத்துகிறது
வனாந்திரத்தை ஊடறுத்து இறங்கும் ஒளி
போலவும்
கோடை இரவுகளில் உருகி வழியும் நிலா
போலவும்
இடி உன் ஆர்ப்பரிப்பு
மின்னல் உன் ஒளிவிளக்கு
புயல் உனது இசைக்குறிப்பு
மழை உனது தீராத கருணை
என் ஒளி நிழல்
வண்ணம் யாவும் நீதான்
உன் முகம் பார்த்தல் என்பது
வெறும் பார்த்தல் அன்று
உயிர் பெறுதல்
மீனுக்கு நீரும் சுவாசமுமாய்
உன்னோடு நான் நிகழ்த்தும் உரையாடல்
வாழ்வின் இசை வாழ்வின் துயரை
கண் திறக்கும் உளி போல
தீட்சண்யம் காட்டி ஒளி
பொழியும் உன் உயிர்மொழி
அன்பை அடையாளப்படுத்திப் பாடும்
குயிலிசை போல் கேட்டுக் கொண்டே
இருக்கிறது
நீ இருக்கும் இடம்
பேரழகு பூண்டு விடுகிறது
சுருள் சுருளாய் மலர்ந்த ரோஜா போல
உன் வாசல் அன்றி
எந்த வாசல் தட்டி
தன்னைப் பகரும் மனம்
வாங்கலும் பாய்தலுமான
அலைபடும் கடலின்
தணியா வெம்மையை
உனதன்பின் வண்ணம் சூடி
எதிர் கொள்கிறேன்
நீ மீட்டும் பாடல் கமகத்தின்
நுட்பம் தெரியா ஈசல்கள்
உன்னை பழித்தாலும்
எளிய மக்களுக்கான உன் இசை
சிதார் மிருதங்கம் சலங்கை பறையுடன்
இணந்து ஒலிக்கும் புதிய ஆலாபனை
மனமெங்கும் பரவிக் கிடக்கின்றது
பன்னீர்பூக்களாய்
வனாந்திரங்களை வளப்படுத்திக் கொண்டே
முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்
நதிகளை
ஒரு போதும் அண்டுவதிலை மூப்பும்
நரையும்
வலுத்த கரங்களின் பேரிழுப்பில்
அசையாமல் நிற்பதில்லை தேர்
உடமை இழந்தோர்களின் விழிநெருப்பில்
எரியாமல் இருப்பதில்லை பெருதீபம்.
விதியை
மாற்றும் வீதிப்பாடல்
விதியை மாற்றும் வீதிப் பாடலை
இசைத்துச் செல்கின்றோம்
நாட்டில் நடப்பதை வீட்டில் சொல்லி
தடுத்திடக் கேட்கின்றோம்
ஆளும் வர்க்கச் சூதுகள் முன்
அறத்தைப் பாடுகிறோம்
பகடைக் காயென மக்களை சாய்க்கும்
சகடரைச் சாடுகிறோம்
நாடாளுவோரின் நாணயமின்மையை
எதிர்த்தே முழங்குகிறோம்
உதிரம் உதிர்த்தே ஊருக்கு
வெளிச்சம் காட்டுகிறோம்
இழந்த வாழ்வின் பசித்த வயிறின்
வெம்மையை எழுதுகிறோம்
மாற்றம் தேடி தெருக்களில் வெடிக்கும்
குரலை ஒலிக்கிறோம்
ஜனநாயகம் நாடுவோர் மனங்களில்
தீக்கதிராய் எழுகிறோம்.
உனக்கு மட்டுமானது
இல்லை
நீ மறைந்ததாய்
அறிவிக்கின்றன ஊடகமும் அரசும்
விதவிதமான
சொற்களால் புகழ்கின்றனர் உன்னை
தேசத்தின் மகள்
என்றும் உண்மை நாயகி என்றும்
உனது வீட்டை அண்டை
அயலாரை படம் பிடிக்கின்றனர்
உன்னை எதிர் கொண்டு வறவேற்க
வருகின்றனராம் அதிகாரிகள்
நீ பிற்பகலிலோ பின்னிரவிலோ வந்து
விடுவதாயும் சொல்கிறார்கள்
முன்னாயத்தமாக கூடுதல் காவலர்கள்
நகரெங்கும் வலம் வருகின்றனர்
இந்தியா கேட் ,விஜய் சவுக், நார்த் ப்ளாக் ,சவுத் ப்ளாக்
நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாய்
அறிவிக்கிறார்கள்
துவாரகை செல்லும் பேருந்து என்று ஏறி
அந்த இருண்ட ஒரு மணி நேரம்
வாதைப்பட்டது நீ அல்ல மகளே
பிறப்புறுப்பில் செருகப்பட்ட கம்பி
உனக்கு மட்டுமானதாய் இல்லை சிதைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டது நீ அல்ல மகளே
ஆயிரம் பக்கங்களில் தயாராகிக்
கொண்டிருக்கிறதாம் குற்றப்பத்திரிகை
அதிகபட்ச தண்டனைக்கு வாதாடுமாம்
அரசாங்கம்
விசாரணைக்கு இரு வேறு குழுக்கள்
அமைக்கபட்டுள்ளதாம்
உன் மூளையும் ஈரலும் காயமேறி கிருமி
தொற்று ஆகிவிட்டதாம்
உன் இதயம் அதிர்ச்சியில் உறைந்து
நின்று போனதாம்
அறிவிக்கிறார்கள் மருத்துவர்கள்
பிடிபட்ட குற்றவாளிகளை விரல் நீட்டி
மறைமுக குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கு
என்று
ஊடகம் முன் பேசிக்
கொண்டிருக்கிறார்கள்
டெல்லி மாநகரம் அமைதி காக்க
வேண்டுமென்றும்
உன் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாயும்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
வன்புணர்விற்கும் வன்கொடுமைக்காளான
பெண்களின் அமைதியுறாத ஆன்மா
அரசாங்கத்தின் வாடிக்கைப் பதிலை கைகொட்டி
ஏளனம் செய்து கொண்டிருக்கின்றன
பதின்மூன்று நாள் தொடர்ந்த உன்
போராட்டம்
மாமூல் பதில் கேட்கவா?
நீதியை காக்க வேண்டுமென்கிற ஆவேசம்
உன்னில் செருகப்பட்ட
இரும்புத்தடியின் கோரத்தை
தனக்கு நேர்ந்ததாய் கருதிக்
கொள்கின்றனர்
ஐம்பது கோடி பெண்ணினம்
நீ எமது மகள் நீ எமது சகோதரி என
ஆவேசம் கொள்கிறது புதிய இந்தியா
டிசம்பர் 6 ஐயும் டிசம்பர் 16 ஐயும் நினைத்து
தூங்காது துடிக்கிறது ஜனநாயகத்தின்
ஆன்மா
பெண் பருகப் படவேண்டிய இச்சைப்பால்
என்றும்
ஆண் குறியின் துய்ப்பிற்கானது யோனி
என்றும்
லிங்கத்தை வழிபடுகிறது மனுசாஸ்திர
சட்டங்கள்
பொருட்களை சந்தைப் படுத்த பெண்ணை
நுகர்வுப் பொருளாக்கும் ஊடகங்கள்
நீர்,நிலம்,கடவுளுக்கு பெண்ணின் பெயர் சூட்டி
சிந்தனையை சுதந்திரத்தை பூட்டி
வைக்கும்
மத்திய கால மதங்கள்
நியாயம் கோரி எழுந்த இளையஇந்தியாவை
144 ஊரடங்கு என்று
அடக்க நினைக்கும் ராணுவ அரசாங்கம்
பிடிபட்ட குற்றவாளிகள் என்னவோ
ஆறுபேர்
பிடிபடாத குற்றவாளிகளால் நிரம்பி
வழிகிறது
நாடாளுமன்றத்தோடு நார்த் ப்ளாக் சவுத் ப்ளாக்.
தேர்வடம் நகர்த்தும் கவிதைகள்
கந்தர்வன்
பூவும் வானமும் கடலும் மரமும் நிலவும்
நட்சந்திரங்களும் ஒரு புறமாகவும்,இவைகளோடு ஒன்றறக் கலந்து வாழ வேண்டிய மனிதன்
அன்றாடப் பாடுகளுக்காக வாழ்க்கை இழுத்த திசைகளுக்கெல்லாம் சென்றபடி இன்னொரு
புறமாகவும் இருக்கிறான்.இயற்கையிடமிருந்து அன்னியப்பட இன்னொரு முக்கியக்
காரணம்,மனிதனைப் பார்த்து மனிதனுக்கு வந்த பயம்.இந்த பயம் விரிந்து கொண்டே
போகிறது.ஊடகங்களும் இந்த பயத்தை வளர்க்கின்றன.சொப்பனங்கள் கூட சுகமாய்
இருப்பதில்லை.
`சமம்’ என்ற சொல் பெரிதுபடுத்தப்பட்டு அதற்கான
காரணங்கள் ருசுப்படுத்தபட்ட பின் நேர்ந்திருக்கும் கொடுமை என்னவெனில் `அசமம்’
அதிகமாகிக் கொண்டே வருவதுதான்.எங்கும் சமமில்லை என்பது மேலும் மேலும் உறுதியாகிக்
கொண்டிருக்கிறது.இந்த `அசமம்’ மனிதனைக் கண்டு மனிதன்,மேலும் மேலும் பயங்கொள்ள
அதிமுக்கியக் காரணியாகிவிட்டது.சமூக அநியாயங்களில் பெரும்பாலானவற்றிற்கும் காரணம்
இந்த `அசமம்’.
சுரண்டல்,பறித்தல்,திருடுதல்,சுருட்டுதல் என்று
வந்த கலைகள் இப்பொழுது வளர்ந்திருக்கின்றன.இது எப்போதும் இருந்து வருகிறது.ஒரு
மனிதக் குரங்கு கையில் இருந்த பழத்தை,இன்னொரு மனிதக் குரங்கு தட்டிப் பறிக்காமலா
இருந்திருக்கும்.தட்டிப் பறித்தலும்,உடல் வளர்ச்சியும்,மனிதன் கண்ட விஞ்ஞான
வளர்ச்சியும் விகிதாசாரத்தில் கூடுதலாகவோ குறைவாகவோ வளர்ந்து கொண்டேதான்
வந்திருக்கின்றன.
இன்னொரு பக்கத்தில் இந்த அசமத்திற்கு எதிரான
யுத்தத்தை மனிதர்களே நடத்தி வருகிறார்கள்.`அசமம் என்பது அநாகரிக சமூக அடையாளம்.நாகரிகமான
சமூகத்தின் அடையாளம் `சமம்’ தான்.நாகரிகமானவர்கள் அறிவாளிகளாயிருந்தால் எடுத்துச்
சொல்கிறார்கள்.போராளிகளாயிருந்தால் சமருக்கு நிற்கிறார்கள்.கவிஞர்களாகயிருந்தால்
கவிதை எழுதுகிறார்கள்.`அசமத்திற்கு’ எதிராக அறிவாளி,போராளி,கவிஞன் இவர்கள் யாரும்
எனக்கு ஒன்றாகவேப் படுகிறார்கள்.
இரா.தெ.முத்து மேற்சொன்னவர்களில்
ஒருவர்.களத்தில் நின்று போராடுகிறார்.அரங்கில் நின்று அநியாயங்களை எடுத்துச்
சொல்கிறார்.அமைதியாய் அமர்ந்து கவிதை எழுதுகிறார்.வெகுகாலமாய் கவிதைகள் எழுதி வந்த
போதும் இப்போதுதான் தொகுப்பாகப் பார்க்க முடிகிறது.வடசென்னையின் நெருக்கடி மிகுந்த
பகுதியில் வாழ நேர்ந்த போதும் வாகனங்கள் பறத்தும் புழுதியையும் புகையையும்
சுவாசித்து வாழ்கிற முத்து, கிராமத்து பாலபருவத்தை முதல் கவிதையாக இதில்
தருகிறார்.
பிள்ளமார் வளவுல/அன்னதானம்
கெடைக்கும்/பனம்பட்டையில/சுடுகஞ்சியும் துவையலும்
`இடப்பெயர்ச்சி’ என்கிற கவிதையை அச்சடித்தும்
அகில உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்தும் எல்லா வீடுகளிலும் கொடுக்க
வேண்டும்.முதியோர்களை ஏமாற்றும் வக்கணையையும் முதியோர் குறித்து வரும்
உருக்கமும்,அவர்களைப் பற்றியும் வேறு யார் கவிதையிலும் கிடைத்து விடுமா?
`மனைவி அமைவதெல்லாம்’ என்பது மாதிரி உடான்ஸ்
விட்டு எழுதுவதை நிறுத்திக் கொள்ளலாம்.`ரோபோட் தேவை’ கவிதையைப் படித்து விட்டு.
தம்பிப்பாப்பா தேவை நாலு வயது மகளுக்கு
கணவனும் மனைவியும் எதிர்காலங் குறித்துக்
கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்.முடிவு இதுதான்,
ஆசைகள்/பிதுங்கி வழியும்/ஆணுறையில்
ஒரு கோவிலுக்குப் போனால் மனிதனுக்கு என்ன
தோன்றும்?திருவிடந்தை நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயிலுறை ஆண்டாள் தனித்து
சிலையாக நிற்பதைப் பார்த்து முத்து எழுதுகிறார்,
அகிலவல்லியோடும்/பத்மாவோடும்/கர்ப்பக்கிரகத்தினுள்/கம்பீரமாய்
பெருமாள்/
என்று சொல்லி வந்து `ஆரேனும் வருவரோ
தாழ்திறக்க’ என்று முடிக்கிறார்.
இரண்டுவித சப்தங்களை தனித்தனியாய் இரண்டு
கவிதைகளாக்கியிருக்கிறார். இரண்டும் அருமையாயமைந்து விட்டன.ஒன்று,
இங்கு சத்தங்களே/சபையேறுகின்றன
அந்தக் கவிதை என்ன சொல்கிறது என்பது
தெளிவு.இன்னொன்று
செடியைத் தொட்ட சப்தமா?/கொடியில் பட்ட சப்தமா?
என்று வரிசையாய்ச் சொல்லிக் கொண்டே வந்து
முடிக்கிறார்.
எதனால் சப்தம்/இந்த மழையின் சப்தம்?
பூட்டுகளில்லா,கதவுகளில்லா ஒரு உலகங்குறித்து
அருமையான கவிதை.கனவுக் கவிதை அது.களத்தில் காயம்பட்டு நிற்பவனின் கனவு அது;கவிதை
அது.
ராமருக்கு கோவில் கட்டுவது குறித்து ஒரு
கவிதை.ராமரை இவர் வித்தியாசமாகப் பார்க்கிறார்.
`பரதனுக்காய் பதவி துறந்தவன்/பகைவனுக்கும் ஈரம்
கசிந்தவன்/சூத்திரனையும் சூரியக்குலச் சகோதரனாய் ஏற்றவன்/அவனுக்கு
ஒன்றென்ன/ஓராயிரம் கோவில் கட்டுவோம்/இடிபாடுகள் மீதல்ல/இதயங்களில்’
`காற்றிலும் தீட்டு’ என்பது முத்துவின்
முக்கியக் கவிதைகளில் ஒன்று.தலித்துகளின் வாழ்நிலைப் பாட்டு அது
`சிரட்டைகளிலும்/கைகளிலும் ஏந்தி/நக்கிட
நாங்கள் என்ன/நாய்களா?’
என்று நீள நீளமாய் கேட்டு வந்து இவ்விதம்
முடிக்கிறார்.
`நீள் ககனப் பெருவெளியில்/எங்கள் சுவாசக்
காற்றும்/கலந்தே இருக்கிறது/நீ மானஸ்தன்/எங்கே உனது மூச்சை நிறுத்திக்
கொள்/காற்றிலும் தீட்டுப் பட்டுவிட்டதடா’
இத்தனூண்டு வீட்டுக்குள் இல்லறம் எப்படி
நடக்கிறது.சிற்றின்பம் சாத்தியமில்லை மனைவியோடு என்று சொல்லாமல் வேறு ஒன்றைச்
சொல்கிறார்.
`அவகாசமில்லையடி வா/பேரின்பம் பெற்றிடுவோம்’
`குழிப்பறி’ வேலை எங்கும் தானிருக்கும்
என்றாலும் சமுகப் போராளிகள் கொண்ட ஸ்தாபனத்தில் அது நடக்கலாமா என்ற கவிதையை
இவ்விதம் முடிக்கிறார்
தோழனே/யாவருக்குமான பொது எதிரி/சவக்குழி
பறிக்கிறான்/ஞாபகம் கொள்
சட்டென்று ஒரு கவிதை இப்படி வருகிறது.
பசுமரமோ/பட்டமரமோ/தொடர்ந்து/பாடும்/குயில்
குறித்து வைத்தக் கவிதைகள் இன்னும் நிறைய
உள்ளன.வாசகனை கவிதைகளுக்குள் அனுப்பும் பொருட்டு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இந்த நூலின் மூலம் முத்து,இன்னும் நகராத தேரின் வடத்தைப் பற்றி இழுக்கும்
ஆயிரமாயிரம் முற்போக்குக் கவிஞர்களோடு தன் கைகளையும் வைத்து இழுக்கிறார்.சில
உறுதியான கைகளைப் போல் இவர் கைகளும் கூட்டத்தில் தெரிகின்றன.இவருக்குக் கவிதை
வாய்த்திருக்கிறது.தேருக்கும் வாய்த்து நகர்ந்தால் பெருமிதமாயிருக்கும்.
கந்தர்வன்